Wednesday, November 4, 2015

கமலும் கருத்துரிமையும்!

அன்புள்ள கமல்!
உங்கள் அதி தீவிர ரசிகன் எழுதுவது. நலம் நலமறிய ஆவல். தாங்களின் தூங்காவனம் திரைப்படம் எந்த சிக்கலும் இல்லாமல் தீபாவளிக்கு வெளிவந்து வெற்றியடைய வாழ்த்துகள். நிற்க
உங்களின் விஸ்வரூபம் திரைப்படம் வெளி வந்தபோது பல பிரச்சனைகளையும் சொல்லொன்னா துயரங்களையும் அனுபவித்தீர்கள்.. அன்று மிகக் கடுமையாக "இருக்கும் சூழ்நிலையில் கருத்துரிமையை நசுக்கும் இந்த நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழி இல்லை" என்று நெஞ்சுரம் கொண்டு பேசினீர்கள் (நெஞ்சுரம் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் இந்நாள் வரை)

அன்று பல்லாயிரக்கணக்கானோர் உங்களின் கருத்துரிமைக்காக உங்கள் பின் வந்தார்கள்.. கொதித்தெழுந்து அரசுக்கு எதிராக பேசினார்கள்.. உங்கள் படமும் வெளிவந்தது. வெற்றியடைந்தீர்கள்.. போட்ட காசை விட அதிகம் சம்பாதித்தீர்கள். அன்று உங்கள் பின்னால் வந்தவர்கள் எல்லாம் கமல் என்ற தனி மனிதனுக்காக வரவில்லை. கருத்துரிமையை காக்க வந்தவர்கள். அன்று எவரும் உங்களுக்காக வரவில்லையென்றால் நீங்கள் நாட்டை விட்டு வெளியேறிருப்பீர்கள் என்று நம்புகிறேன். கருத்துரிமைக்காக பலர் போராடியதால் இன்று தாய் நாட்டில் இருக்கிறீர்கள்.

அன்று கருத்துரிமைக்காக பேசிய நீங்கள், "நாட்டைவிட்டு வெளியேறுவதை தவிற வேறு வழி இல்லை" என்று சொன்ன நீங்கள் இன்று "இந்தியாவில் சகிப்பின்மைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பெரும் கலைஞர்கள் தங்கள் விருதுகளை திருப்பிக் கொடுப்பது அரசையும், விருதுகொடுத்தவர்களையும் அவமதிக்கும் செயல், அதை நான் செய்யப்போவதில்லை, விருதை திருப்பித் தருவதால் பலனொன்றும் இல்லை" என்று திருவாய் மலர்ந்திருக்கிறீர்கள்.
"நான் திருப்பித் தரவில்லை" என்று மட்டும் சொல்லி இருந்தால் அது உங்கள் உரிமை என்று ஒதுங்கி போய்விடலாம்..ஆனால் "இது நாட்டை அவமதிக்கும் செயல், மக்களை அவமதிக்கும் செயல்" என்று ஆளும் அரசாங்கத்திற்கு அல்லக்கை போல் பேசி இருப்பதுதான் கண்டனத்துக்குரியது. நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று சொன்னதை விடவா விருதை திருப்பி கொடுப்பது பெருங்குற்றம்?


ஆளும் மத்திய அரசு "மதம்" என்ற பெயரால் மக்களை தூண்டிவிட்டு . இனம் மொழி பிரச்சனைகளை ஊதி பெரிதாக்கி, கலவரங்களை தினம் தினம் ஏற்படுத்துகிறது..அதை கண்டிக்கும் வகையில் எழுத்தாளர்கள் தங்களின் விருதுகளை திருப்பி தருகிறார்கள்.. அதில் எள்ளளவும் "உங்கள் படம் வெளிவரவில்லை என்பதற்காக நீங்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறேன்" என்று நீங்கள் சொன்ன சுயநலம் கூட இல்லை.. அவர்கள் சொன்னது மக்களுக்காக.. நீங்கள் சொன்னது உங்களுக்காக.





உங்களின் பேச்சு கண்டனத்துக்குரியது.. கருத்துரிமைக்கு எதிரானது.. எழுத்தாளர்களை அவமதிக்கும் செயலாகவே இருக்கிறது..

இன்றிலிருந்து உங்களது அதி தீவிர ரசிகன் என்ற இடத்திலிருந்து இறங்கி ஒரு பார்வையாளன் என்ற முறையில் இருக்கப்போகிறேன்..
நன்றி
அன்புடன்,
சூர்யா

No comments:

Post a Comment